அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் (355 கோடி) பெறுமதி சேர் வரியை (வற்) செலுத்தத் தவறிய குற்றத்திற்காக டபிள்யூ.எம்.மென்டிஸ் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க , திங்கட்கிழமை (14) ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த வரிகளை செலுத்துமாறு 11/14/2023 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், குறித்த வரிகளை செலுத்தாத காரணத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, பிரதிவாதிகள் நீதிமன்றில் ஆஜராகியதுடன், பிரதிவாதிகள் உரிய வரிப்பணத்தை இன்றைய தினம் (திங்கட்கிழமை 14) செலுத்தாவிடின் அவர்களுக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதவான் அறிவித்தார்.
முன்னதாக பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்துள்ளது.
2016 மற்றும் 2019 க்கு இடையில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ‘வற்’ செலுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சார்பில் சட்டத்தரணி தினேஷ் பெரேரா ஆஜரானார். பிரதிவாதிகள் சார்பில் திருமதி சானக்கயா லியனகே ஆஜரானார்.