வடக்கு, கிழக்கு பகுதிகளில் புலிகள் கட்டுப்பாடு காரணமாக போதைப்பொருள் மாபியாக்கள் ஊடுருவ முடியவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
கொழும்பு – 20 ஆகஸ்ட் 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால், அந்தப் பகுதிகளில் போதைப்பொருள் மாபியாக்கள் ஊடுருவ முடியவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைந்தது.
தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள், முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அங்கு ஒரு பாதாள உலகம் உருவாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை பெரிதாக தீவிரமடையவில்லை. ஏனெனில், அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு ‘God Father’ இருந்தமையே அதற்குக் காரணம் என அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், பாதாள உலக வளர்ச்சிக்கு பொறுப்பான அந்தந்த கால அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களைத் தடுக்க, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததாகவும், கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதாலேயே மோதல்கள் குறைக்கப்பட்டதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
—
Editor: கதிர்