லண்டனிலிருந்து திரும்பிய மூதாட்டியை கொலை செய்து முதலைகள் அதிகமுள்ள பகுதியில் வீசிய கொலையாளி!
கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்துவந்த மூதாட்டி நேற்று மாலை காணாமல்போன நிலையில் இன்று கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் வீதியிலுள்ள மரப்பாலம் என அழைக்கப்படும் பாலத்தின் கீழ் ஆற்றில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்பு.
குறித்த மூதாட்டி லண்டனிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்துள்ளார். அம்பாள் குளத்தில் உள்ள காணியைப் பார்ப்பதற்காக உதயநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். நேற்று மாலை வங்கிக்கு சென்றுவந்த நிலையில் மாலை மூன்று மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராசேந்திரம் இராசலட்சுமி எனும் 67 வயதான மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி வசித்த வீட்டில் இரத்தக்கறை காணப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குடும்பஸ்தர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேகநபரது தகவலுக்கமைய சந்தேகநபரையும் அழைத்துச் சென்ற பொலிஸார் கிளிநொச்சி – அக்கராயன் ஸ்கந்தபுரம் வீதியிலுள்ள மரப்பாலத்தின் கீழிருந்து சடலத்தினை மீட்டுள்ளனர். சடலம் உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. குறித்த மரப்பாலத்தின் கீழுள்ள ஆற்றில் மிக அதிகளவான முதலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சடலத்தினை வேறொருவருடன் சேர்ந்து கிளிநொச்சியிலிருந்து பல கிலோமீட்டர்கள் கொண்டுசென்று வீசியிருப்பதாக தெரியவந்துள்ளது. முதலைகள் சடலத்தினை தின்றுவிடும் தான் தப்பிவிடலாம் எனும் நோக்கில் கொலையாளிகள் செயற்பட்டுளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.