பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கை இந்தாண்டில் மோசமான நிலைமை எட்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டொலர் மாற்று விகிதம் சுமார் 330 முதல் 350 ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சுமார் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க டொலர் 300 ரூபாவுக்கு குறைந்துள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் டொலர் அதிகளவில் வெளிச்செல்லும். இதன்மூலம் டொலருக்கான கேள்வி மீண்டும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினை தொடர்ந்து, உலக வங்கி (WB) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ADB போன்ற பலதரப்பு நிறுவனங்களில் இருந்து பெரிய அளவிலான வரவுகள் கிடைக்கவுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பை 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தற்போது அந்நிய செலாவணி கிடைப்பதால், இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் கட்டுப்பாட்டினை விரைவில் நீக்க வேண்டி நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.