தெல்கொட – மஹவத்தயில் அறுவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி தெல்கொட – மஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாய், தந்தை, மகன்மார் மூவர் மற்றும் வயோதிப பெண் ஒருவரை கொலை செய்து, குறித்த வீட்டிலிருந்த உறவுமுறை பெண் ஒருவரை தாக்கி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றத்தால் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பை அறிவித்த நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் R.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், இந்த வழக்குடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரான வெலிவிட்ட லியனகே மகேஷ் வசந்த பெரேரா என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேல் நீதிமன்றத்தின் உத்தரவானது சட்டத்திற்கு மாறானதென தீர்மானித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.