நெஸ்லே மைலோ வர்த்தக நாமத்தின் பூரண அனுசரணையுடன் கல்வி அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 31 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மைலோ கிண்ண வலைபந்தாட்ட இறுதிச் சுற்று மாத்தறை உயன்வத்தை விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன.
13, 15, 17, 19 ஆகிய நான்கு வயதுக்குட்பட்ட பிரிவுகளில் இறுதிச் சுற்று நடத்தப்பட்டு வருகிறது.
போட்டியின் இரண்டாம் நாள் மாலைவரை பெரும்பாலான முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் நடந்துமுடிந்துள்ளதுடன் ஒரு சில முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன.
நடப்பு ஒட்டுமொத்த சம்பியன் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயம் நான்கு வயது பிரிவுகளிலும் கால் இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஏ பிரிவில் களுத்துறை திருக்குடும்ப கன்னியாஸ்தரிகள் மடம் கல்லூரி மாத்திரம் கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
இப் பிரிவில் இன்னும் 7 முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
17 வயதுக்குட்பட்ட பிரிவில் கண்டி ஹில்வூட், கொழும்பு தேவி பாலிகா, களுத்துறை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம், நுகேகொடை அனுலா, ஹோமகம சிறிபியரத்தன, புத்தளம் கார்மேல் மகளிர் வி., மலியதேவ, தெஹிவளை ப்ரெஸ்பெட்டேரியன், விஷாகா உட்பட மேலும் 6 அணிகள் முன்னோடி கால் இறுதிச் சுற்றில் விளையாட தகதிபெற்றுள்ளன.
15 வயதுக்குட்பட்ட பிரிவில் கொழும்பு புனித பிறிஜெட், கண்டி நல்லாயன் மகளிர். வி., வெண்ணப்புவை திருக்குடும்ப க.ம., ஆகியன கால் இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
இப் பிரிவில் கண்டி நல்லாயன் மகளிர். வி., சமுத்ராதேவி, பன்னிப்பிட்டி தர்மபால, குருநாகல் மலியதேவ உட்பட 10 அணிகள் முன்னோடி கால் இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
13 வயதுக்குட்பட்ட பிரிவில் 9 அணிகள் முன்னோடி கால் இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன. இப் பிரிவுக்கான எஞ்சிய போட்டிகள் இன்று நடத்தப்படும்.
நாளைய தினம் முன்னோடி கால் இறுதிகள், கால் இறுதிகள், அரை இறுதிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இறுதிப் போட்டிகள் நிறைவில் பரிசளிப்பு வைபவம் நடைபெறும்.