தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் அதனை சூழவுள்ள தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹெமில்டன் கால்வாய் மற்றும் லுனு ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (19 ) அதிகாலை 01.30 மணி முதல் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வீதிகளின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தோடுவாவ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வீதியில் பயணித்த பல வாகனங்கள் நீரில் சிக்கி பயணிக்க முடியாமல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, வினாடிக்கு 53 கனமீட்டர் நீர் கொள்ளளவு குடா கங்கையில் திறந்து விடப்பட்டதால் குடா கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் அதனை சுற்றியுள்ள தாழ்வான நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புலத்சிங்கள மோல்காவ பிரதான வீதியின் தம்பளை மற்றும் எடம்பகஸ் சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகள், தாழ் நிலங்கள் மற்றும் வீடுகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேபோல் புலத்சிங்கள – மோல்காவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் புலத்சிங்களவில் இருந்து மோல்காவ, லத்பந்துர, கெலின்கந்த முதலான பகுதிகளுக்கு செல்ல மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மஹாவெவ, லுனு ஓயா மற்றும் ஹெமில்டன் கால்வாய் நிரம்பி வழிவதால் கொழும்பு-புத்தளம் வீதி மஹாவெவ நகருக்கு அருகில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மஹாவெவ தனிவெல்ல ஆலயத்தில் இருந்து மஹாவெவ நகரம் வரையான வீதியில் நீர் நிரம்பியுள்ளதால், வாகன போக்குவரத்து மிகவும் ஆபத்தானது என மாதம்பே மற்றும் மாரவில பொலிஸ் நிலையங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக களுத்துறை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,354 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.