நிந்தவூர் மத்ரசா பாடசாலையில் இருந்து வீடுகளுக்கு உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைத்தீவு பகுதியில்மத்ரசா பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.
பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இப் பேரனர்த்தத்திற்கு காரணமான உழவு இயந்திரம் மற்றும் அதன் பெட்டி கனரக இயந்திரம் மூலம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற காரைதீவுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
முப்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானப்படை விமானமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
எனினும் பகல் ஒரு மணி வரை இரண்டு சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. மேலும் நால்வர் இன்னமும் மாயமாகியுள்ளனர். தேடுதல் தொடர்கிறது.