குருணாகலில் துயர சம்பவம்: யானையின் தாக்குதலில் தாயும் மகளும் உயிரிழப்பு
குருணாகல் – 20 ஆகஸ்ட் 2025
குருணாகல் மாவட்டத்தின் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள், 28 வயதான தக்ஷிலா சுபாஷினி மற்றும் அவரது தாயார், 53 வயதான இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போலீஸ் தகவலின்படி, நேற்று (19) காலை 9.00 மணியளவில் வயலில் பணியாற்றிக் கொண்டிருந்த தாயையும் மகளையும் காட்டு யானை தாக்கியது. கடுமையாக காயமடைந்த இருவரும் உடனடியாக அம்பன்பொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் மகள் தக்ஷிலா சுபாஷினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தாய் இனோகா குமாரி மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோதிலும் அங்கு வைத்தும் உயிரிழந்தார்.
இனோகா குமாரி அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி சுற்றித் திரிவதாகவும், கிராம மக்கள் வாழ்வில் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், குருணாகல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானை மனித மோதல் தீவிரமடைந்து வரும் சூழலை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது.
—
Editor: கதிர்