மாவீரர் குடும்பங்களின் வறுமை நிலையை நீக்க புலம்பெயர் தொழிலதிபர்களின் பங்களிப்புடன் சுயதொழில் முயற்சி_- பொன் சுதன்!
எங்கள் தேசத்தை காக்க இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களின் பெற்றோர் சொல்லணா துன்பங்களால் துவண்டு போய் இருக்கின்றார்கள். தமிழ்த் தேசியம் பேசும் போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மாவீரர் குடும்பங்களை கண்டுகொள்வதில்லை.
இந்த அரசியல் வாதிகளை நம்பி பயனில்லை என்ற நிலையில் தான் நான் அரசியலுக்குள் நுளைந்தேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன் சுதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பல புலம்பெயர் தொழிலதிபர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவ தயாராக உள்ளனர். போர் முடிவுக்கு வந்து ஒரு சில ஆண்டுகளில் புலம்பெயர் தமிழர்களால் முன்னாள் போராளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு கோடிக்கணக்கான பணம் தமிழ்த் தேசிய அரசியல்வாதி ஒருவரிடம் வழங்கப்பட்டது. குறித்த பணத்தில் ஒரு ரூபாய் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் உதவித் திட்டங்களை தவிர்த்தனர்.
சரியான சுயதொழில் திட்டங்களை முன்வைத்தால் உதவி செய்ய எனது நண்பர்களான பல புலம்பெயர் தொழிலதிபர்கள் தயாராக உள்ளனர். அரசியல் அதிகாரத்தை மக்கள் எனக்கு தருவார்களாயின் மூன்று மாதங்களில் புலம்பெயர் தொழிலதிபர்களையும் இணைத்து பாரிய சுயதொழில் புரட்சியை ஏற்படுத்துவேன்.
சுமார் ஒரு வருடத்தில் ஒரு குடும்பம் கூட வறுமை நிலையில் இருக்காது என்பதை உறுதி கூறுகிறேன். இதுவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை தெரிவுசெய்த நீங்கள் இம்முறை மட்டும் என்னை தெரிவுசெய்யுங்கள். ஒரு வருடத்தில் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன்.மாற்றம் வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
நான் வெற்றி பெற்றால் அது என்னுடைய வெற்றி அல்ல அது உங்கள் வெற்றி என்றார்.
பொன் சுதன் அருணோதயம் மக்கள் முன்னணியின் தண்ணீர் குழாய் சின்னத்தில் இலக்கம் 6 இல் யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.