பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு,
கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உயிரிழந்த 42 வயதான R. ராஜகுமாரி சார்பில் சட்டத்தரணி சேனக்க பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜராகினர்.
சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தகவல்கள் பதிவு செய்யப்படும் ஆவணத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா
என வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.
குறித்த ஆவணத்தில் சந்தேகநபரான பெண்ணின் பெயர் இருக்கவில்லை என வெலிக்கடை பொலிஸார் இதன்போது மன்றில் தெரிவித்ததாக
சட்டத்தரணி சேனக்க பெரேரா கூறினார்.
பெயர் குறிப்பிடப்பட்டமைக்கான பதிவு இல்லையென்பதனூடாக இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள்,
இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்ப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல, எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜராக வேண்டுமெனவும் அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின் பின்னர் மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சேனக்க பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.
இந்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் 10,000 ரூபா பணம் இறந்த பெண்ணின் கணவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த
மரணத்தை மறைப்பதற்காகவா இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்குள்ளான காயங்களே காணப்பட்டதாக
சம்பவத்தில் உயிரிழந்த R.ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.