மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வசிக்கும் செல்வராசா ஜசிந்தன் (31) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளைஞனின் திடீர் மரணம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- அராலி மேற்கு பகுதியில் வசிக்கும் செல்வராசா ஜசிந்தன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் உறவினர்களால் அராலி மத்தியில் உள்ள மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர் .
அங்கே மந்திரவாதி வழங்கிய மந்திரித்த இளநீரைப் பருகிய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இளைஞன் உயிரிழந்ததை அறிந்த மந்திரவாதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.