போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?
ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான #கருணாகரன் எழுதுகிறார்.
கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49), செந்நிலா (வயது 50). எல்லாமே எதிர்பாராத சந்திப்புகள். ஏழு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்களோடு பழகி வந்திருக்கிறேன். சிலரோடு சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறேன். என்ன துணிச்சல்! எவ்வளவு ஆற்றல்! எப்படியான திறமை! நாம் எதிர்பார்த்தேயிராத வகையில் எந்த வேலையையும் வலு சிம்பிளாகச் செய்து முடித்துவிடுவார்கள். எதிர்பாராத கோணங்களில் அசாத்தியமான முடிவுகளை எடுப்பார்கள். அத்தனை சிந்தனைத் திறன், அவ்வளவு விவேகம்.
அந்த நாட்களில் இரவு பகலாகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை செய்தவர்கள். காடு மேடு, கடல், மலை என்று தங்களுடைய பணிகளுக்காக ஓய்வின்றிக் களைப்பின்றி அலைந்து கொண்டிருந்தவர்கள். எந்த அபாயச் சூழலையும் துணிச்சலாக எதிர்கொண்டவர்கள். அநேகமாக எல்லோரும் தங்களுடைய பள்ளிக் காலத்திலேயே வீட்டை விட்டு வெளியே வந்து, ஆயுதந்தாங்கிய விடுலைப் போராட்டத்தில். போராளிகளாக. பதினைந்து இருபது ஆண்டுகளாக செயற்பட்டிருக்கிறார்கள். சிலர் அதற்கும் கூட.
ஆனால், போராட்டம் தோற்கடிக்கப்பட்டு, போர் பேரழி்வுகளோடு முடிந்தபோது எல்லோரும் நிர்க்கதியாகி விட்டனர். அதற்குப் பிறகு, இவர்கள் பழகிய, பயின்ற எதையும் வீட்டிலோ சமூகத்திலோ பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தங்களை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாமல் போனது. திறமையான கடலோடிகளாக இருந்த பெண்கள் பின்னர் கடலில் ஒரு நாள் கூட படகோட்டுவதற்கு வாய்ப்பின்றிப் போனது. என்னதான் திறமையும் கடற் பரிச்சியமும் இருந்தாலும் யார்தான் பெண்களைக் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பார்கள்? மிகத் துணிச்சலான சமராடிகள், (போர்க்களத்தில் படையினரை விரட்டியவர்கள்) வீட்டிலே யாருடன் சமராடுவது? கனரக வண்டிகளைச் செலுத்திய பெண்களுக்கு யார்தான் அந்த வேலையைக் கொடுக்க முன்வருவார்? காடுகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்தவர்களுக்கு ஊருக்குள்ளே என்ன வேலை கொடுப்பதென்று தெரியவில்லை யாருக்கும். மனதுக்குள் இவர்களுடைய திறனையும் ஆற்றலையும் புரிந்துகொண்டாலும் வெளியே அதை ஏற்று அங்கீகரித்து இடமளிக்க முடியாமலிருக்கிறது.
தங்கள் இளமையை இந்தச் சமூகத்துக்காக, இந்த இனத்துக்காக, இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்களே, அதற்குக் கைமாறாக என்ன கொடுக்க முடியும்? இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றால் இன்று இவர்கள் இருக்கின்ற உயரம் எப்படியாக இருந்திருக்கும்? இவர்கள் வேறு யாருமல்லவே, எங்கள் மகள், எங்கள் சோதரிகள், எங்கள் தோழிகள் அல்லவா!
ஆனால், இப்படி யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கை இன்று கேள்வியாகிவிட்டது. கொல்லாமல் கொல்லும் உறவுகளின் – சமூகத்தின் பாராமுகமும் இரண்டக நிலையும் இவர்களை கொன்று கொண்டேயிருக்கிறது.
அருவி, பின்தங்கிய ஒரு கடலோரக் கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு ஒரு கை இல்லை. அந்தப் பிள்ளைகள் கொடுக்கும் சிறிய தொகைப் பணமே அவளுடைய தேவைகளுக்கானது.
வெற்றிமலர், இவளும் ஒரு கடலோரக் கிராமத்தில்தானிருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு தையல் பழகி, அதன் மூலம் சீவியத்தை ஓட்டுகிறாள்.
நிலா, சில காலம் பழகிய தொழிலான வீடியோ எடிற்றிங்கைப் பல கடைகளில் செய்தாள். எல்லோரும் மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுத்தார்கள். ஒரு காலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் உருவாக்கியவள். அவளுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ யாருமே இல்லை. பேசாமல் தோட்டத்தில் புல்லுப்பிடுங்கவும் வெங்காயம் நடவும் போகிறாள். வயிறொன்று இருக்கிறதல்லவா. அதை விட ஒவ்வொரு நாளையும் எப்படியோ போக்கிக்கொள்ள வேண்டுமே!
அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.
நிலவழகி, எதையும் கூருணர்வோடு அணுகும் திறனுள்ளவள். இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதிருக்கிறார். அதனால் எங்குமே செல்வதில்லை. ஒரு சிறிய வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள அறையே அவளுடைய பேருலகம். அமைதியான சுபாவம். சிரிப்பினால் எல்லாவற்றையும் சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கிய உறவுகள் என்று எதுவுமில்லை. தெரிந்தவர்களின் அனுசரணையில் வாழ்க்கை ஓடுகிறது.
ஆனால், இதுவும் எவ்வளவு காலத்துக்கு இப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்கிறார். அதனால், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத போராளிகளுக்காக இயங்கும் விடுதி ஒன்றில் (இது புலம்பெயர்ந்தோரினால் நடத்தப்படுவது) இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கிடைத்தால் போய் விடுவேன் என்றாள். அவளுக்கென்றொரு காணி வன்னியில் உண்டு. ஆனால், அதில் ஒரு வீட்டைப் போட்டுக் கொண்டு இருப்பதற்கு இன்னும் முடியவில்லை. அவளும் எத்தனையோ வழிகளால் முயற்சித்து விட்டாள். ஆனாலும் எதுவுமே கை கூடவில்லை.
மலரினி, காலில் பெரிய காயம். சீராக நடக்க மாட்டாள். அதைவிட வயற்றிலும் பெருங்காயங்களின் தளும்பும் உள் வலியும் இன்னும் உண்டு. ஒரு திருமணம் ஏற்பாடாகி வந்திருக்கிறது. ஆனால், அந்த மணவாளன் தன்னைப் பற்றிய விவரங்களை முழுதாகவே மறைத்து அவளைத் திருமணம் செய்ய முற்பட்டிருக்கிறான். இறுதியில்தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகளும் மனைவியும் ஏற்கனவே உண்டென்று. “அரும்பொட்டில் தப்பினேன்” என்று சொன்னாள். “இனி திருமணத்தைப் பற்றிய பேச்சே வேண்டாம்” என்கிறாள்.
செந்நிலா, ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லை. ஆனாலும் ‘நம்பிக்கை’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி அதை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள்.
வீட்டிலிருந்து பொது வெளிக்குச் செல்லும்போது ஏற்படும் நெருக்கடியை விட, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை விட, பொதுவெளியில் செயற்பட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது ஏற்படும் நெருக்கடியும் சிக்கல்களுமே பெண்களுக்கு அதிகம். அவர்கள் அவற்றை எதிர்கொள்வதுதான் மிகச் சிரமம். அதிலும் சற்று வயது அதிகமாகி விட்டால் யாரோடும் ஒட்டிக்கொள்ள முடியாமல் முகச்சுழிப்பு வரையில் கொண்டு போய் விடும்.
திருமண வயதை இழந்துவிட்டால் எப்படி இந்தப் பெண்ணை வீட்டில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வந்துவிடும். சிலவேளை அம்மாவோ அப்பாவோ இல்லாமல் சகோதர்கள், சகோதரிகள் மட்டும் இருக்கிற வீடுகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. “வந்து விட்டாயா? இனி என்ன செய்யப்போகிறாய்?” என்று பச்சையாகவே கேட்டுவிடுவார்கள். என்னதான் பிள்ளைப் பாசம், சகோதர பாசம் என்றிருந்தாலும் மணமாகாத, மண வயதைக் கடந்த பெண் என்றால் அது ஒரு முள்தான்.
அதுவும் போராட்டத்தில் – இயக்கத்தில் – ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் கடுமையாக நடந்துகொள்வார்கள்; அதிக சுயாதீனத்தைக் கோருவார்கள் என்ற கற்பிதங்கள்… எனப் பல காரணங்கள் இந்த மதிப்பிறக்கத்தை உண்டாக்குகின்றன.
இதனால், இந்த முன்னாள் போராளிகளுக்கு இன்று வந்திருக்கும் சோதனை சாதாரணமானதல்ல. சிலர் இவர்களை மதித்து சிறிய அளவிலான உதவிகளைச் செய்தாலும் அது வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கில்லை. வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய வயதெல்லையையும் கடந்துவிட்டார்கள்; அதோடு கல்வி மூலமாகப் பெறக்கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறார்கள்.
ஆனால், ஒவ்வொருவரோடும் கதைத்தபோது பொதுவாகவே சில விசயங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது. தங்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் தேற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இனி நிலை என்ற பிறகு வேறு என்ன செய்ய முடியும் என்ற கட்டத்தில் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் எதையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். இதில் அவமானங்கள், துயரங்கள் அனைத்தும் சேர்த்தி.
இந்த நிலை ஏதோ இந்த ஏழு பெண்களுக்கும் மட்டும்தான் என்றில்லை. இவர்களைப்போலப் போராட்டத்தில் (இயக்கத்தில்) பங்கேற்ற பல நூறு பெண்களுக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையாகும்.
இது பேரவலம். பெருந் துயரம். பெரும் அநீதி.
முதலாவதாக இவர்கள் எதிர்த்தரப்பினால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தத்தத்தின் மூலம். அதைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டனர். மீள வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் சிறையிருந்தே மீள வேண்டியிருந்தது.
மீண்ட பெண்களைத் தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கிறது. அது நோக்கும் நிலை குறித்து, நடத்தும் விதம் குறித்து இங்கே நாம் எழுதித் தீராது.
அத்தனை வலி நிறைந்த ஏராளம் ஏராளம் கதைகள் அவை.
1970களில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, (அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக) சிறை சென்ற புஸ்பராணியின் அனுபவங்களே போதும் இந்தப் பெண்களுடைய நிலையை அறிந்துகொள்வதற்கு. அதற்கும் அப்பால் இவர்கள் இப்போது சமூகச் சிறையில் சிக்கியிருக்கிறார்கள். இது இரண்டாவது சிறை. இதனுடைய தண்டனைகள் மிக நுட்பமானவை. வீட்டிலிருந்தும் சமூக வெளியிலிருந்தும் நுட்பமாக ஓரம் கட்டுவது.
ஆனால், அதை இவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. “என்ன இருந்தாலும் எங்களை வீட்டுக்காரர் (பெற்றோரும் சகோதர சகோதரிகளும்) ஏற்றுக்கொண்டிருப்பதே பெரிய விசயம். அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் தோற்றுப் போனதற்கும் தோற்கடிக்கப்பட்டதற்கும் அவர்கள் பொறுப்பாளிகளில்லையே!…
நாங்களும் வீட்டிலிருந்திருந்தால் எங்களுடைய வாழ்க்கையும் வேறாகியிருக்கும்… ஆனால், நாங்கள் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே. அந்தக் கடந்த கால வாழ்க்கையின் மூலம் எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கு. ஒரு நிறைவிருக்கு. எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை இந்தச் சமூகத்துக்காகச் செய்திருக்கிறோம்.
அதில் முழுமையான வெற்றி கிடைக்காது விட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அது போதும். ஒரு காலத்தில் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி என்ற நிலையில் நாங்கள் இணைந்துகொண்டு எங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறம். அந்தக் காலப் பணியை களப்பணியாகச் செய்த நிறைவுக்கு முன்னால் எதுவும் ஈடாகாது. அந்த நிறைவு போதும் எங்களுக்கு. இதை எங்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டிலிருந்தே சொல்கிறோம். இதுதான் எங்களுடைய பலம். மகிழ்ச்சி. அடையாளம் எல்லாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திருப்தி இருக்கும் அல்லவா. ஒரு மகிழ்ச்சி. ஒரு நிறைவு. ஒரு அடையாளம். அப்படி எங்களுக்கு எங்களுடைய கடந்த காலம் இருக்கு….” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே போகிறார்கள்.
நான் எதுவும் பேசாமல் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரும் தனித்தனியாகச் சொன்னாலும் எல்லோருடைய கூட்டு எண்ணமும் நம்பிக்கையும் கருத்தும் ஒன்றுதான். ஒரே சாரத்தைக் கொண்டவை.
செந்நிலா, பேசும் போது தன்னுடைய அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அதைப் படிக்கத் தந்தாள். அதிலே சில வரிகளின் கீழே அடிக்கோடிட்டிருந்தாள். அந்த வரிகள் இப்படி இருந்தன: ‘நாம் தேவதைகளாக ஒரு போதுமே இருந்ததில்லை. நிலமாக, நீராக, காற்றாக, வானாக, தீயாக இருந்தோம். அப்படித்தான் இன்னும் இருக்கிறோம்.’
இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா?