இலங்கைக்காக தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்த இங்கிலாந்து இளவரசி ஆன் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இன்று (13) அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி ஆன் மற்றும் அவரது குழுவினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-505 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டனர்.
கடந்த 10 ஆம் திகதியன்று இலங்கையை வந்தடைந்த இளவரசி ஆன் பிரம்மாண்டமான வரவேற்புடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் கண்டி, யாழ்ப்பாணம் உட்பட சில இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பொருட்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள மாஸ் ஆடைத்தொழிற்சாலையை அவர் பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் நலன்கள் தொடர்பான ஐ.நா நிறுவனமான சேவ் த சில்ரனின் கொழும்பு அலுவலகத்திற்கு பிரித்தானிய இளவரசி ஆன் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
தவிரவும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இளவரசி யாழ் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டு, இளவரசி ஆன் இன்று அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.