இது கனதியான மாதம். எங்கள் வேங்கைகளை நினைந்துருகும் புனிதமான மாதம்.
எங்கள் தாயகத்தின் சுதந்திர தாகத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் மாவீரர்கள். உலகில் எங்கும் நிகழாத அற்புதமான தியாகங்களைச் செய்து இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கும் மாவீரச் செல்வங்களில் உறுதியெடுப்போம்.
எங்கள் மாவீரர்களின் தியாகங்களைச் சொல்லி வாக்கு கேட்டு எங்களை ஏமாற்றி அரசியல் செய்யும் போலிகளை விரட்டியடிப்போம் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சமூக செயற்பாட்டாளர் பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீர் துயிலும் இல்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் :-
என்னுடைய சகோதரர்கள் இருவர் மாவீரர்கள். ஒரு சகோதரனை என்னுடைய தந்தையாரே போராட்டத்தில் இணைத்தார். இப்போது சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர். அவர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புவது முகநூலில் கார்த்திகை பூ படத்தை பதிவிடுவதும் முகநூலில் அஞ்சலி செலுத்துவதும் மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலி அல்ல.
இந்த மாவீரர்களைப் பெற்ற பெற்றோர் படும் துன்பங்களை துடைக்க என்ன உதவி செய்தீர்கள். ஒரு குடும்பத்திற்காவது ஒரு நேர உணவாவது வாங்கி கொடுத்திருக்கிறீர்களா? போர் ஓய்ந்து இத்தனை ஆண்டுகளில் மாவீரர் குடும்பங்களின் ஒரு குடும்பத்திற்காவது உங்களால் உதவ முடிந்ததா.
முகநூலில் தேசியம் பேசுவதால் மாவீரர் குடும்பங்களின் பசி தீர்ந்துவிடாது. எனது சகோதரர்கள் இருவர் மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் சந்ததித்தவன். பல கோடி பணம் தமிழ் மக்களுக்காக செலவழித்தவன்.தமிழீழ தேசியத் தொலைக்காட்சி எங்கள் குடும்பத்தின் செயற்பாட்டை ஆவணமாக்கி ஒளிபரப்பியது. இத்தகைய பின்னணியைக் கொண்ட நான் போர் மெளனிக்கப்பட்ட பின்னர் பயந்து இந்த மண்ணிற்கு வராமல் பதுங்கி நிற்கவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணில் எத்தகைய கண்காணிப்பு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளோடு தொடர்பட்ட ஒருவன் இந்த மண்ணிற்கு வந்து சுதந்திரமாக செயல்பட முடியுமா? சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதற்காக நிர்க்கதியாக நிற்கும் மக்களை கைவிட்டு ஒதுங்கி வாழ்வதா? சாத்தியமான முறையில் இந்த மக்களிற்கு பல ஆயிரம் குடும்பங்களிற்கு என் சொந்த பணத்தில் உதவினேன்.
500 ற்கும் மேற்பட்ட மாவீரர் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவியாக சுயதொழில் முயற்சிக்கு உதவி செய்துள்ளேன். முகநூலில் கார்த்திகைப் பூ படத்தை பதிவிட்டு என் கடமை முடிந்தது. நான் தமிழ் தேசியவாதி என்று நான் இருக்கவில்லை.
என்னால் தனி ஒருவனால் சொந்த உழைப்பில் முடிந்த வரை உதவி செய்துவிட்டே அரசியலில் இறங்கினேன். சொத்து சேர்ப்பதற்காக அல்ல. சொத்து சேர்ப்பது என்றால் லண்டனிலேயே சுகபோகமாக வாழ்ந்திருப்பேன்.
நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால் மட்டுமே அனைத்து மக்களினதும் அவலத்தை இல்லாமல் செய்ய முடியும் என்பதாலேயே அரசியலில் இறங்கினேன்.
பல கோடி சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் ஒரு மாவீரர் குடும்பத்திற்காவது ஒரு நேர உணவாவது வாங்கி கொடுத்திருக்கிறார்களா? ஆனால் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்தி படம் காட்ட அடிபடுகிறார்கள். உண்மையான போராளிகள் குப்பி கடித்து இறந்துவிட்டார்கள் என்று முன்னாள் போராளிகளை கேவலப்படுத்தியதும் இந்த அரசியல் வாதிகள் தான். சாப்பிட வழியில்லாமல் போராட போனார்கள் என்று கேவலமாக கதைத்தவர்களும் இந்த அரசியல் வாதிகள் தான்.
மாவீரர்கள் மேல் சத்தியம் செய்து உறுதி கூறுகிறேன். என்னை மக்கள் வெற்றிபெறச் செய்தால் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை, வேலை வாய்ப்பு பிரச்சினைகள் ஆறு மாதங்களில் நீக்குவேன். அதேபோல் முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என்றார்.
பொன் சுதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ், கிளிநொச்சி மாவட்டத்தில் தண்ணீர் பைப் சின்னத்தில் 6ம் இலக்கத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.