“மிகக்கேவலமாக முதுகெலும்பு இல்லாதவராக கையாலாகாதவராக அரசு தரப்பில் கடற்தொழில் அமைச்சர் உள்ளார்” _கஜேந்திரகுமார்.
வடக்கு கிழக்கு பகுதியை சேராத தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்களும் இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் அடாத்தாக வடக்குக் கடலில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்தி தமிழ் மீனவர்களையும் அவர்களது உடமைகளையும் மீன் வளத்தையும் அழித்து வருகின்றனர்.
இவற்றையெல்லாம் தடுக்காது திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே அனுமதித்து வருகிறது சிறிலங்கா கடற்படை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் காணிகளை அபகரித்து ஒரு ஆக்கிரமிப்புப் படையாக இங்கே இருக்கின்ற சிறிலங்கா கடற்படை தமிழ் மீனவர்கள் மீதான இந்த அத்துமீறல்களை அனுமதிப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மீனவ சமூகத்தை மேலும் வறுமைப்படுத்தி அவர்களை இந்த பகுதியில் இருந்து தாமாகவே வெளியேற்றும் ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலாகவே நான் இதைப் பார்க்கிறேன்.
வடக்கு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என கூறிக்கொள்ளும் கடற்தொழில் அமைச்சர் மிகக்கேவலமாக முதுகெலும்பு இல்லாதவராக கையாலாகாதவராக அரசு தரப்பில் இருந்து கொண்டு தனக்கு வாக்கு போட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
அரசின் இந்த பாராமுகம் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே. ஆகவேதான் பிரச்சினைகளின் அடிப்படைகள் குறித்து பேச வேண்டும், அதிகாரங்கள் பகிர வேண்டிய தேவை குறித்து பேச வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். மாறாக வெறுமனே ஒற்றையாட்சி என்றும் 13ஆம் திருத்தம் என்றும் பேசிக்கொண்டிருப்பது பிரச்சினையின் அடிப்படையை மடைமாற்றம் செய்தாகும்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து நாம் கொண்டுவரவிருந்த ஒத்திவைப்பு பிரேரணையை ஒத்திவைக்குமாறும் தாம் இந்த விடயம் குறித்து உடனடியாக காத்திரமான நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய தூதரகம் நமக்கு உத்தரவாதம் தந்திருக்கிறது.
இதேவேளை இந்த விடயத்தில் உண்மையில் சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதப்படுத்த வேண்டிய சிறிலங்கா ஒன்றுமே செய்யாது இருக்க வெளிநாடு ஒன்று இந்த விடயத்தில் உத்தரவாதம் தர வேண்டிய நிலைமை இங்கு நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.