தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் திலின கமகே, புதன்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பொது ஒழுங்கை மீறும் வகையிலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகள் பரப்பப்பட்டமைக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரின் இணைய ஊடுருவல் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் சந்தேகநபரை எவ்வாறு விளக்கமறியலில் வைக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதவான், சாட்சியங்கள் இன்றி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க முடியாது என சுட்டிக்காட்டி பிணை வழங்க உத்தரவிட்டார்.
சந்தேக நபரை இரண்டு பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை ஏப்ரல் 3ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.