கர்ப்பிணி பெண்ணை வாகனத்தினால் மோதிய முன்னாள் கணவர் கைது!
கர்ப்பிணி பெண் ஒருவரை மகிழுந்தினால் மோதித்தள்ளிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
மாலை 7 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண் ஒருவரை மகிழுந்து மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
இச்சம்பவத்தை பார்வையிட்ட பாதசாரிகள் சிலர் உடனடியாக மருத்துவக்குழுவினரை அழைத்துள்ளனர். கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்தினால் மோதியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும், அவரது மகிழுந்து காப்புறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவம் விபத்து இல்லை எனவும், வேண்டுமென்றே மகிழுந்தினால் அவர் மோதியுள்ளார் எனவும், குறித்த நபர் அப்பெண்ணின் முன்னாள் கணவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.