ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் இந்த வருடம் நடத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஸ்ரீலங்கா இளையோர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொழும்பு தெற்கு இளையோர் அணி சம்பியனானது.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கண்டி, தம்புள்ளை, காலி ஆகிய பிராந்தியங்களின் இளையோர் அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொழும்பு தெற்கு அணியும் கண்டி அணியும் விளையாட தகுதிபெற்றன.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கண்டி அணியை 149 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட கொழும்பு தெற்கு அணி சம்பியன் பட்டத்தை சூடியது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு தெற்கு இளையோர் அணி 49 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றது.
முன்வரிசையில் ரேஷான் சொலமன்ஸ் 77 ஓட்டங்களையும் பின்வரிசையில் 8ஆம் இலக்க வீரர் ஆதீஷ லக்ஷான் 24 ஓட்டங்களையும் 9ஆம் இலக்க வீரர் தாருக்க சமின்ஜித்த ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் 10ஆம் இலக்க வீரர் சனிது கன்கானம்கே 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சனிது குணதிலக்க 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சானுல் கொடிதுவக்கு 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி இளையோர் அணி 25.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சானுல் கொடிதுவக்கு (36), யெனுல ஹேவாவித்தாரண (14) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சனித்து கன்கானம்கே 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மெத்தும் பெர்னாண்டோ 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதீஷ லக்ஷான் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சம்பியனான கொழும்பு தெற்கு இளையோர் அணிக்கு பிரிமா வெற்றிக் கிண்ணத்துடன் 500,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற கண்டி இளையோர் அணிக்கு 300,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
விசேட விருதுகள்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: ரேஷான் சொலமன்ஸ் (கொழும்பு தெற்கு)
சிறந்த பந்துவீச்சாளர்: யுமல் எகோடகே (தம்புள்ளை)
இறுதி ஆட்டநாயகன்: சனித்து கன்கானம்கே (கொழும்பு தெற்கு)
தொடர் நாயகன்: துஷேன் உடவெல (கொழும்பு தெற்கு)
பிரிமா குறூப் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளர் அண்டி விராவன், பிரிமா குறூப் ஸ்ரீலங்கா சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஜித் குணரட்ன, ஸ்ரீலங்கா கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சமன் தொடன்வெல ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர்.