முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிராட்டிகுளம் கிராமம் வெள்ளம் காரணமாக வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் குறித்த கிராமம் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வசித்து வரும் நிலையில் குறித்த குடும்பங்கள் வெள்ளத்தினால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில் , 7,8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும். பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்
இதேவேளை, கால்நடைகள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்படுதாகவும் , சிலவற்றை இறந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். சிறு குழந்தைகளுடன் அவர்கள் வாழ்ந்து வரும் நிலையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் தாம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த 16ம் திகதி வரை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 283 குடும்பங்களை சேர்ந்த 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது