தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு தலைமைக்குழு தீர்மானித்துள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (07) இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் உள்வீட்டு தகவல்களை வெளிப்படுத்தியதாக தெரிவித்து விந்தன் கனகரத்தினம் மீது உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி அவரிடம் இருந்து விளக்கம் கோருவதாக தலைமைக்குழு தீர்மானித்துள்ளது. இதேவேளை அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். குறித்த தீர்மானத்தை அடுத்து விந்தன் கனகரத்தினம் கூட்டத்தில் இடைநடுவில் வெளியேறி சென்றிருந்தார்.
இதேவேளை கட்சியின் தீர்மானத்தை மீறி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளித்தமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்திடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தலைமைக்குழு தீர்மானித்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்தேர்தல்மாவட்டத்தில் வேட்பாளரை பெயரிடும் விடயம் தொடர்பாக சுரேன் குருசாமி, குகதாஸ் ஆகியோரிடமும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பவுள்ளதாக தலைமைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.