மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ‘Cyber Criminal Area’ எனப்படுகின்ற சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தததை அடுத்து மியன்மாருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மியாவெட்டி நகரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரதேசம் முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக இலங்கை தூதரகம் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள நேரிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் கூறினார்.