கார்த்திகைப்பூ அலங்காரம்! கொந்தளிக்கும் சிங்கள அமைப்புக்கள்!
வடக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு பாடசாலைகளிலும் இல்ல அலங்காரத்தின்போதும், விநோத உடைப்போட்டியின் போதும் இலங்கையின் அரசமைப்பை மீறும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்து அதற்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் சிங்கள – பௌத்த அமைப்புக்கள் சில இணைந்து முறைப்பாடு மேற்கொண்டுள்ளன.
வடக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளின்போது பாடசாலைகளின் இல்ல அலங்காரத்தில் பயன்படுத்திய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் விநோத உடைப்போட்டியின் போதும் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.ஆகப் பிந்தியதாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல அலங்காரம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் சிங்கள – பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும், சிங்கள அரசியல் கட்சிகளும் இணைந்து நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
அந்தக் கடிதத்தில் மேற்படி பாடசாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை கோரியுள்ளன. இந்தக் கடிதம் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.