செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney இன்று (13) காலை யேமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது ஹூதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30-க்கும் அதிக தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
செங்கடலில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களைத் தடுத்து, அதனைக் குறைக்கும் நோக்கில் யேமன் மீது தாக்குதல் மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் – கிரீன்பீல்ட் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தெரிவித்தார்.
இதனிடையே, ஹூதி கிளர்ச்சியாளர்களை தாக்குவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்நாட்டு காங்கிரஸின் அனுமதியை கோரவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜோ பைடன் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக செங்கடலுக்கு கடற்படைக் கப்பலொன்றை அனுப்ப இலங்கையும் இணங்கியுள்ளதாக, கடந்த 03 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி ரணில் விக்fpரமசிங்க தெரிவித்திருந்தார்.
கடற்படை பின்னர் வௌியிட்ட தகவலுக்கமைய, அமெரிக்கா மற்றும் இந்தியா தலைமையிலான தரப்பினர் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுத்துள்ள கடற்படை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த கப்பல் அனுப்பப்படவுள்ளது.
கப்பலை அனுப்பி வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை அதற்கான திகதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் தாக்குதலை மேற்கொண்டால் தங்களது தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.