கொரோனா ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
கொரோனா ஒமிக்ரோன் பிறழ்வு மீண்டும் நாட்டில் வேகமாக பரவுவதால் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் நான்காவது கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இதனால் மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலும் பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போதும் முகக்கவசத்தை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், தற்போது நாடளாவிய ரீதியில் நான்காவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதால், இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சிறந்தது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், நேற்று முந்தினம் 5 பேர் கொரோனாத் தொற்றால் மரணமாகியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.