மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று: வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்களை அதிரடியாக மூடிய தவிசாளர்.
மட்டக்களப்பு – 18 செப்டம்பர் 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், வியாபாரச் சான்றிதழ் பெறாமல் செயல்பட்டு வந்த சில தனியார் நிதி நிறுவனங்கள் பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் அதிரடியாக மூடப்பட்டன.
குறித்த நிதி நிறுவனங்கள், பிரதேச சபையிடமிருந்து சட்டப்படி தேவையான வியாபாரச் சான்றிதழ் பெறாததுடன், மக்களிடமிருந்து அதிகூடிய வட்டி வீதங்களை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, தவிசாளர் நேரடியாக சென்று அவற்றின் அலுவலகங்களை பூட்டிய நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை அலுவலகத்தில், நுண் நிதிக் கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான இரு கலந்துரையாடல்களிலும், வியாபாரச் சான்றிதழ் பெறாத நிறுவனங்களும், அதிக வட்டி வசூலிக்கும் நிறுவனங்களும் மூடப்படும் என தவிசாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்கமாட்டேன். மக்களை சுரண்டி அதிக வட்டி வசூலிக்கும் நிறுவனங்களையும், வியாபாரச் சான்றிதழ் பெறாத அனைத்து நிதி நிறுவனங்களையும் மூடுவேன்” என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் உறுதியளித்தார்.
இந்த அதிரடி நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு, சட்டப்படி அனுமதி பெறாத நிதி நிறுவனங்களுக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.