சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கவிதை மற்றும் பாடல்கள் மூலம் தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் ஈழத்து படைப்பாளிகளில் ஒருவரான செல்வி ரேகா சிவலிங்கம் அவர்களுடனான நேர்காணல்.
கம்பர்மலை உடுப்பிட்டி வடக்கில் வசித்து வரும் செல்வி ரேகா சிவலிங்கம் யாழ் பல்கலைக்கழக இசைத்துறைப்பீடத்தில் நுண்கலைமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுவதுடன் அறநெறி ஆசிரியையாகவும் கற்பித்து வருகிறார். இந்நிலையில் கவிதை மற்றும் பாடல்கள் மூலம் பல விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
துறைசார்ந்த ரீதியில் அனுபவம்
துறைசார்ந்த ரீதியில் நோக்கும்போது , நான் பாடசாலையில் கல்வி கற்ற காலத்திலிருந்தே பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அந்தவகையில்தான் கதை,கவிதை,சிறுகதைகள் மீது சிறுவயதிலிருந்தே தீராத மோகம் இருந்தது அதனால் மித்திரன் பத்திரிகையினை வாங்கி விரும்பி வாசிப்பேன். அவ்வாறுதான் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பத்திரிகையினை வாசித்துக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் “ நானும் எழுதினால் என்ன? “ என்ற ஒரு எண்ணம் என் மனதினுள் தோன்றியது அப்படி தோன்றும் போது எழுதிய ஒரு கவிதையினை மித்திரன் பத்திரிகைக்கு அனுப்பினேன்.அனுப்பிய மறு வாரமே கவிதை பிரசுரமாகியிருந்தது. அப்படி முதன்முறை பத்திரிகையில் என் கவிதையினை பார்த்தபோது அடைந்த ஆனந்தமும், பத்திரிகையினை தூக்கி திரிந்து ரசித்த காலமும் இன்றளவும் மறக்கமுடியாது. அதுவே என் துறைசார்ந்த ரீதியில் எனக்கு கிடைத்த முதல் அனுபவமும் என் எழுதுகோலிற்கு கிடைத்த முதல் அங்கீகாரமும் ஆகும்.
அதன்பிறகு ‘வாசுரேகா ‘ எனும் பெயரில் கவிதைகள் ,கருத்துக்கள்,கட்டுரைகள், விவாதக்கருத்துக்கள் போன்றவற்றை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளேன் அவை பிரசுரங்களாகி என் எழுதுகோலிற்கு மேலும் உத்வேகத்தினை தந்தன.
3. உங்களுடைய எழுத்தாக்கம் ரீதியான படைப்புக்கள்
கவிதைகள்,கதைகள், கட்டுரைகள், விவாதக்கருத்துக்கள் போன்றவற்றை எழுதியுள்ளேன். கவியரங்கங்களிலே பங்குபற்றியுள்ளேன், அத்தோடு எம் கம்பர்மலை ஞானபைரவருக்காக “ கம்பர்மலை பதி அமர்ந்த….” என்ற பாடலினையும், சந்நிதி முருகனுக்காக “ ஆற்றங்கரை ஓரத்தில் அரசாளும் சந்நிதியான்……..” என்ற ஒரு பாடலினையும் ,
ஒற்றுமைக்காக, “மனிதா மனிதா விழித்தெழு மனிதா…….” என்று ஒரு பாடலினையும் எழுதி வெளியீடு செய்துள்ளேன்.
4.முதலாவது படைப்பு
நான் இன்னும் தனிநூல் தொகுப்பினை வெளியீடு செய்யவில்லையாதலால் படைப்பு என்ற ரீதியில் ஒரு ‘காதல் கவிதையே எனது முதலாவது படைப்பு ஆகும்.அக்கவிதை மித்திரன் பத்திரிகையிலே 29.08.2010 அன்று பிரசுரமானது. அவ்வரிகள் இதோ!
கல்லறை வாசகம்
&&&&&&&&&&&
உன்னை நினைத்து
ஒரு கவிதை எழுதினேன்
எழுதியபின்புதான்
புரிந்தது
அது கவிதை அல்ல-எனக்கே
நான் எழுதிய
கல்லறை வாசகமென்று !
5. எழுத்தாக்கத்தில் படைத்த சாதனைகள்….
சாதனைகள் என்று சொல்லுமளவு எழுத்துலகிலே இன்னும் சாதிக்கவில்லை … ஆயினும் பொழுதுபோக்கு என்று நினைத்து நான் எழுத ஆரம்பித்தவை இது பொழுதுபோக்கு அல்ல என்று எனக்கு உணர்த்தி சமூகத்தில் இலக்கிய பங்களிப்பினை பறைசாற்றி, எழுத்துலகிலே என்னை அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல் இளங்கலைஞர் விருதினையும் என் கரங்களில் தவழவைத்தது என் எழுத்தாக்க படைப்பிலே எனக்கு கிடைத்த சிறந்ததொரு அங்கீகாரம் ஆகும். அத்தோடு எனது எழுதுகோலின் படைப்புக்கள் இலங்கை வானொலிகள் ,சர்வதேச வானொலிகள், மித்திரன்,வலம்புரி,உதயன்,யாழ்களரிபோன்ற பத்திரிகைகள் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,இணையங்கள் , முகநூல் காணொலிகள் போன்றவற்றில் வெளியாகியுள்ளமையும் , என் கவிதைகள் சில ஏனைய எழுத்தாளர்கள் தொகுப்பு செய்த புத்தகங்களிலே இணைந்து இடம்பெற்றுள்ளமையும் என் படைப்புக்களிற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
6. பெற்றுக்கொண்ட விருதுகள்
விருதுகள் என்று நோக்கும் போது எனது எழுத்துக்களுக்கு முதன்முதலில் விருது அளித்து வரவேற்பு கொடுத்தது சமூக ஊடகங்கள் மூலமான இலக்கிய அமைப்புக்கள் தான்
அந்தவகையிலே “அமுதசுரபி அறக்கட்டளை” இலக்கிய அமைப்பானது ஆண்டுவிழாவினை முன்னிட்டு நடாத்திய கவிதை போட்டிகளிலே ஒருமாதகாலம் தொடராக பங்குபற்றி அதிக வெற்றிச்சான்றிதழ்கள் பெற்றதன் அடிப்படையில் “ காதல் கவிதை நாயகி” என்ற விருதினை பெற்றுக்கொண்டேன்.
அடுத்து பிரான்ஸ் நாட்டின் அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் புனிதபூமி இணையத்தளம் இணைந்து நடாத்திய யாழ் நூலக எரிப்பின் 37 ஆவது ஆண்டு நினைவுதின கவிதைப்போட்டியில் வெற்றி பெற்று யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்விலே விருதும் , சான்றிதழும் பெற்றுக்கொண்டேன்.
மேலும் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற யாழ் மாவட்ட பண்பாட்டு விழாவில் ‘இளங்கலைஞர்’ விருதினை பெற்றுக்கொண்டேன்.
மேலும் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகளிலே கவிதை, பாடலாக்கம், சிறுவர்கதை போன்றவற்றில் வெற்றிச்சான்றிதழ்களும், யாழ் இலக்கிய குவியம் நடாத்திய போட்டியிலே பரிசில்களும்,பெற்றுள்ளேன்.
மேலும் சமூக ஊடகங்கள் மூலமான இலக்கிய குழுமங்கள் நடாத்திய கவிதை போட்டிகளிலும் அதிக வெற்றிச் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.
7. இத்தனை காலமாக எழுதுகிறீர்கள், விருதுகளும் வாங்கியுள்ளீர்கள் ஆயினும் ஏன் நூல் தொகுப்பு வெளியிடவில்லை ?
எனது எழுத்து பயணம் பொழுதுபோக்காக ஆரம்பித்தது என்பதனால் ஆரம்பத்தில் நூல் வெளியீடு பற்றிய எண்ணமே எனக்கு தோன்றவில்லை ………பிற்பாடு ஓரிரு வருடங்களாகத்தான் நூல் தொகுப்பு பற்றி சிந்தித்தேன். ஆயினும் என் எண்ணத்தில் தோன்றிடும் அனைத்தையும் அச்சிலே பதிக்கமுடியாது அல்லவா?
அதனால்தான் வெளியிடும் நூல் இன்னும் தரமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணியே காலதாமதம் ஆகிவிட்டது. தற்சமயம் அதற்கான பணிகளில்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் என் கவிதைகள் நிச்சயம் நூல் தொகுப்பாக வெளிவரும்.
8. முகம் கொடுத்த சவால்கள்
என் படைப்புக்கள் பத்திரிகைகள், சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது பாராட்டுக்கள் எவ்வளவு கிடைத்ததோ அதேபோல விமர்சனங்களும் நிறையவே கிடைத்தன…அதிலும் குறிப்பாக ஆண்கள் எதைச்செய்தாலும் ரசிக்கும் சமூகம் அதையே ஒரு பெண் செய்யும்போது ஆயிரம் கண்ணோட்டத்தில் அலசுகிறது.
அப்படித்தான் நான் எத்தனையோ கவிதைகள் எழுதியிருந்தால் கூட நான் எழுதிய காதல் கவிதைகளை மட்டும் எடுத்து என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு காதல், காதல் தோல்வி ,அனுபவ வரிகள் என்றெல்லாம் கதை பேசியவர்கள் அதிகம் ..
அத்தோடு முதன் முறை பாடல் எழுதி வெளியிட்டபோது ஒரு இசையமைப்பாளருடன் ஏற்பட்ட சிறு கருத்து முரண்பாடு அவர் என் கருத்தினை தவறாக புரிந்து கொண்டு என்னைப்பற்றி முகநூலில் விமர்சித்து எழுதுமளவிற்கு ஆரம்பகாலத்தில் என்னை நோக்கி விமர்சனங்கள் இருந்தன.
அதுமட்டுமல்ல இந்த ஆண்டில் கூட “ மனிதா மனிதா…..” என்று இனமத ஒற்றுமையை கருதி நான் எழுதிய ஒரு பாடல் வெளியீடு செய்திருந்த அதே நாளில் நான் வேறொரு காரணத்திற்காக என்றோ , எழுதியிருந்த ஒரு கவிதையினை எடுத்து நான் மதங்களை மதிக்காதவள் என்ற ரீதியில் சித்தரிப்பு செய்து வசைபாடியிருந்தார் ஒருவர் .
இப்படி இன்னும் எத்தனையோ சொல்லெறிகள் விழுந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த விமர்சனங்களால் ஆரம்பத்தில் சில பயங்கள், பல மன உளைச்சல்கள் ,ஏற்பட்டாலும் கூட போகப்போக விமர்சனங்களையும் அமைதியாக கடந்து செல்ல பழகிக்கொண்டேன். இந்த விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதினை விட என் எழுதுகோலின் படைப்புக்கள் பதில் சொல்வதே சரியாக இருக்கும் என்பதே உண்மை. அதேவேளை எழுத்துலகிலே பாராட்டி ஊக்கப்படுத்தவும் சரிபிழைகளை சுட்டிக்காட்டி மெருகேற்றவும் சில உண்மையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை
எது எவ்வாறாகிலும் தற்போதெல்லாம் புகழ்ச்சியோ ,இகழ்ச்சியோ எதையும் என் மனதில் ஏற்றிக்கொள்வதில்லை….. எனக்கென்று ஒரு தனி அடையாளம் நோக்கி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
9. தற்காலத்தில் படைப்பாக்கத்தின் தன்மைகள்
எவற்றை எழுதுகின்றோமோ அல்லது உருவாக்குகின்றோமோ அவைதான் சிறந்த எழுத்துக்கள், ்அல்லது சிறந்த படைப்புக்கள் என்ற நிலை மாறி எதை எப்படி எழுத வேண்டும் / உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சரியான தரம் நோக்கி உருவாகி கொண்டிருக்கிறது தற்கால படைப்புக்கள்.
உண்மையிலேயே ஆரம்ப காலத்தினை விட தற்காலத்தில் ஈழத்தின் படைப்பாக்கங்கள் வளர்ச்சிப்பாதையினை நோக்கி சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சியானதொரு விடயமாகும்.
மற்றும் கவிதை ,கதை ,குறும்படம் திரைப்படம், பாடலாக்கம் ,இசை , நாடகம், இசையமைப்பு என அனைத்திலும் சிறந்ததொரு தன்மையினை தற்கால படைப்புகள் நிலைநிறுத்தியுள்ளன.
10. எதிர்காலத்தில் அடையப் போகும் இலக்கு
சமூகத்திற்கு பயன்படும் வகையிலும், இலக்கிய உலகிலே நிலைத்து நிற்கும் வகையிலும் நல்ல காத்திரமான நூல் தொகுப்புக்களை வெளியிட வேண்டும் என்பதோடு சிறந்த எழுத்தாளராக உருவாக வேண்டும் என்பதும் என் தற்போதைய இலக்கு. இன்னும் எதிர்கால இலக்குகள் சில இருக்கின்றன ஆயினும் நாளை என்பதே நிச்சயம் இல்லை அல்லவா ? அதனால் காலத்தை பொறுத்து பதில் சொல்கிறேன்.
11.சமூகத்தில் உங்களை அடையாளப்படுத்திய விதம்
நான் என்னை அடையாளப்படுத்தினேன் என்பதனைவிட பத்திரிகைகள்,சமூக ஊடகங்கள் மூலம் வெளிவந்த என் எழுத்துக்களும், கவிதைக்காணொலிகள், பாடலாக்கம் போன்ற படைப்புக்களும் என்னை சமூகத்தில் ஒரு எழுத்தாளராக அடையாளப்படுத்தியது என்பதே பொருத்தமாக இருக்கும் அந்தவகையில் எனக்கு களம் அமைத்து தந்த பத்திரிகைகள், வானொலிகள், இணையங்கள் , இலக்கிய அமைப்புக்கள், டான் தொலைக்காட்சி அனைத்திற்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.
12. சமூகத்திற்கு தாங்கள் சொல்லப்போகும் அறிவுரைகள்
வாழ்க்கை என்னும் பயணத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் எதிர்பாராத நேரத்தில் நடந்தேறிவிடும் அதிலே வெற்றியோ தோல்வியோ தூக்கி நிறுத்த பத்து நபர்கள் வந்தால் தள்ளிவிடுவதற்கு 20 நபர்கள் வருவார்கள் எதுவரினும்
இன்பமோ,துன்பமோ எதிலும் தரித்து நின்று தேங்கி விடாமல் நதிபோல ஓடிக்கொண்டே இருங்கள் ஒவ்வொரு இடைவிடாத முயற்சிக்கும்,பயிற்சிக்கும் என்றோ ஒரு நாள் வெற்றி நிச்சயம் காத்திருக்கும்.
பிறந்தோம் இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை வாழும் வரை ஏதோ ஒரு இலக்கு நோக்கி பயணியுங்கள் …..வாழ்க்கை முடிந்த பின்பும் வரலாறு பேசும்.
ரேகா சிவலிங்கம் எழுதிய கவிதைகள் சில
யாழ் இலக்கிய குவியம்.
நடாத்திய கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிதை .
*மீறிய பருவம்
“””””””””””””””””””””
பூச்சூடி பொட்டிட்டு
புதுச்சேலை தானுடுத்தி
பார்த்திட்ட வரனுக்கெல்லாம்
பூத்தமுகம் தினம்காட்டி
பருவத்து ஆசைகளை
மனதினிலே பூட்டிவைத்து
மணமாலை சூடிடவே
கனவினிலே ஏங்கிஏங்கி
பார்த்தவரன் பதிலுக்கோ
விழிபூத்துக் காத்திருப்பாள்.
பார்த்தவனோ ‘பாவை’யென
பாரா முகமாக
விலைபேசி போகையிலே
பெற்றவர்கள் உற்றவர்கள்
பெருஞ்சுமையாய் நினைத்துவிட
சுற்றமும் குற்றமாக
விடியாதவள் எனஉரைக்க
பார்த்திருந்த கன்னியவள்
பருவம்மீறி முதிர்கன்னியாக…
காத்திருந்த ஏழையவள்
விழி
பூத்திருக்கும் கண்ணீரிலே….
வலி
பூத்திருக்கும் மனதினிலே….*
*தமிழ் தலைவனின் பிறந்தநாள்…..
……………………………………………
வல்வெட்டித்துறையில் வந்து விழுந்த வித்து
தரத்தில் குறைந்திடாத முத்து
எம் தமிழினத்தின் சொத்து
தமிழன் என்ற பெயர் கேட்டால்
தரணியும் சொல்லும் உன் நாமம்
தமிழ் மண்ணிற்கே இது பெருநாமம்
தமிழாய் உதித்தாய்
தமிழீழத்தினை விதைத்தாய்
தமிழுக்காகவே வாழ்ந்தாய்
உன் பலம் அழிக்க
உலக நாடுகள்
பல இணைந்ததாம்
இதுவே உன் பலத்திற்கு சாட்சி
பிறர் பயத்திற்கும் சாட்சி
வீழ்ந்துவிட்டீர்களாம்
வீழ்த்திவிட்டோமாம்
வீரம் என்று சொல்லி
விதண்டாவாதம் பேசுகிறார்கள்
வீ ழும் நிலை வந்தாலும்
பிறர் காலில் விழாமல்
வீழ்ந்துமடியக் கற்றுக்கொடுத்த நீரா வீழ்ந்துவிடுவீர் பிறர்முன்னே……..
தற்காலிக வீழ்ச்சிக்கள் எல்லாம் தோல்விகள் என்றால் இங்கு வீழ்ந்தவன்தான் எழுச்சிகொண்டுள்ளான் எம் இனமும் எழுச்சி கொள்ளும் என்றாவது ஒருநாள்
பிதற்றுபவர்கள் பிதற்றட்டும்
எமக்கு தெரியும்
எம் இனத்திற்கு புரியும்
எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் ……
வாழ்த்துக்கிறேன் உங்களை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா…..