யாழில் இப்படியும் மோசடி!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்ற சிறிது நாள்களில் தாயார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பமாகவிருந்த நிலையில், வெளிநாட்டிலுள்ள மகன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளருக்கு தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு, தனது தாயாரின் பெருவிரல் அடையாளத்தைப் பெற்று சொத்துக்களை மோசடியான முறையில் மாற்றம் செய்ய முயன்றுள்ளனர் என்ற தகவல் தனக்கு ஊரிலிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் சட்ட மருத்துவ நிபுணருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கத்துக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உயிரிழந்த பெண்மணியைப் பராமரித்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தாம் மருத்துவமனையில் சேர்க்கும்போது அவரது பெருவிரலில் எந்தவொரு மை அடையாளமும் இருக்கவில்லை என்றும் இப்போது அது எப்படி வந்தது என்பது தமக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பின்னரே உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் கையளிக்கப்படவுள்ளது.