காணி தொடர்பான வழக்கொன்றில் பொலிஸார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கீழ்மைப்படுத்துகின்றனர் என்று தெரிவித்து சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, மேற்படி மனுதாரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேலதிக அறிக்கையை திருத்தி மீண்டும் தாக்கல் செய்துள்ளதாக பிரதிவாதி மன்றில் நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை நடத்திவரும் காணி மோசடி தொடர்பான வழக்கொன்றில் சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் முன்பிணை பெற்றிருந்தார்.
அந்த முன்பிணைக் கட்டளையில் முகத்தோற்றமளவில் மனுதாரர் மீது அவர் சான்றுப்படுத்தியதாகக் கூறப்படும் உறுதி நிறைவேற்றங்களில் ஏதாவது குற்றப் பொறுப்புடைமை காணப்படுவதாகத் திருப்பதியடையவில்லை என்று மன்று குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில், சட்டத்தரணி கு.குருபரன் ஊடாக சட்டத்தரணி வீ.கௌதமன் தற்போது தாக்கல் செய்த மனுவில்,கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதியிட்டு மேலதிக அறிக்கையைப் பொலிஸார் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில் மனுதாரர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து தன்னைப் பொலிஸார் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் பிணை விண்ணப்பத்தைச் செய்தார் என்றும், குறித்த வழக்கில் மனுதாரரைக் கைது செய்ய வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டிருப்பதுடன், மனுதாரர் வழக்கில் சந்தேகநபராக முற்படுத்த வேண்டிய நபர் என்றும் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மனுதாரர் மன்றில் சமூகமளிக்கும் வகையில் அறிவித்தல் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த வாசகங்களைக் கொண்ட விண்ணப்பமானது நீதிமன்றம் ஆக்கப்பட்ட கட்டளையை வேண்டுமென்றே தவறாக முன்னிலைப்படுத்திச் செய்யப்பட்ட விண்ணப்பம் என்பதுடன், நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கீழ்மைப்படுத்துவதாகவும், நீதிமன்றத்தின் கௌரவத்தைக் கீழ்மைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டே மனுதாரர் வீ.கௌதமன் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில் முதலாம் பிரதிவாதியாக கொன்ஸ்டபிள் வசிகரனும், இரண்டாம் பிரதிவாதியாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயனும் மன்றில் நேற்று முன்னிலையாகினர்.
மனுதாரரான சட்டத்தரணி வீ.கௌதமன் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கு.குருபரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், வி.திருக்குமரன், யாழ். மாநகர முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் உள்ளி;ட்ட 20இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
முதலாம் எதிர்மனுதாரர் சார்பில் பி.சர்மினியும், இரண்டாம் எதிர்மனுதாரர் சார்பில் அன்ரன் புனிதநாயகமும் முன்னிலையாகினர்.
இரண்டாம் எதிர்மனுதாரரான பொலிஸ் பொறுப்பதிகாரி, மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயத்தை, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்த மேலதிக அறிக்கையை திருத்தம் செய்து தாக்கல் செய்துள்ளார். முதலாம் எதிர்மனுதாரர் தனது சட்டத்தரணியூடாக மனுதாரர் குறிப்பிட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட யாழ்ப்பாணம் நீதிவான் அ.அ.ஆனந்தாராஜா எதிர் மனுதாரர்களை சொந்தப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்