தலவாக்கலை – நுவரெலியா வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் ரதல்ல பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம் பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த கல்முனையைச் சேர்ந்த ஹனிபா முகம்மட் அலியார் (வயது 65) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கல்முனை சாய்ந்தமருதுவில் இருந்து சுற்றுலாவுக்காக நுவரெலியா நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடும் அபாயங்களும், செங்குத்தான சரிவுகளும் உள்ள இச்சாலையில், ஐந்து டன்னுக்கும் அதிகமான கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தும், விபத்துக்குள்ளான லாரி ஓட்டிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மழை, மூடுபனி போன்ற கால நிலைகளில் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டிச் செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதுடன், இரவு நேரங்களிலும் ரதல்ல குறுகிய சாலைப் பகுதியில் வாகனங்களை ஓட்டும் போது, வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும். காரின் உயர் கியர்களைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
:-மஸ்கெலியா விசேட நிருபர்.