லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கெப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கெப் ரக வாகனத்தின் உரிமையாளர், இராணுவத்தின் மேஜர் ஆவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கெப் ரக வாகனத்தை இராணுவ மேஜர், கொள்ளுப்பிட்டியில் உள்ள வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
வர்த்தகரை படுகொலைச் செய்தவர்கள் இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியே இந்த குற்றச்செயலை புரிந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கித்தாரிகள் இருவரும், அந்த கெப்ரக வாகனத்தில் பொரளை குறுக்கு வீதிக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் அவ்விடத்தில் இறங்கி மோட்டார் சைக்கிளில் பேஸ்லைன் ஊடாக லெஸ்லி ரணகல மாவத்தைக்குச் சென்று இந்தக் குற்றச்செயலை புரிந்துள்ளனர்.
இந்த படுகொலைக்கு ஒத்துழைப்பு நல்கினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.