தேதி : 12 செப்டம்பர் 2025
இடம் : கொழும்பு
அரசாங்க வீட்டை காலி செய்ய அறிவிப்பு – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது வசித்து வரும் அரசாங்க வீடிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, தமக்கென தனி வீடு ஒன்றை கொழும்பில் கண்டுபிடிக்க குறைந்தபட்சம் இரண்டு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
14 மில்லியன் ரூபாய் தனிப்பட்ட செலவில் பராமரிப்பு
சந்திரிக்கா தனது உத்தியோகபூர்வ இல்லமாக ஒதுக்கப்பட்ட அந்த அரசாங்க வீட்டில் 14 மில்லியன் ரூபாய் செலவில் தானே பல பழுதுபார்ப்புகள், புதுப்பித்தல் மற்றும் நிலத்தோற்றப் பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
“நான் வந்தபோது அங்கு புல் கூட இல்லை, கற்கள் மட்டுமே இருந்தன,” என அவர் கூறினார்.
வாழ்நாள் முழுவதும் தங்க அனுமதி மறுப்பு
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “புதிய சட்டம் இயற்றப்படும் வரை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தி வாழ்நாள் முழுவதும் இங்கு தங்க அனுமதி தரவும்,” எனக் கேட்டதாகவும்,ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சந்திரிக்கா கூறினார்.
ஆரோக்கிய சிக்கல்கள் – புதிய வீடு தேடும் சிரமம்
தான் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து உயிர் பிழைத்ததாகவும், வயதான நிலையில் புதிய வீடு தேடி செல்வது கடினமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“வாடகைக்கு வீடு தர முன்வந்தவர்கள், சமீபத்தில் JVP ஊடக விமர்சகர் சுதா அளித்த கடுமையான விமர்சனங்களால் அச்சத்தில் இருந்து பின்னடைந்தனர்,” என சந்திரிக்கா குற்றம்சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம் மீது குற்றச்சாட்டு
திசாநாயக்க அரசாங்கம் ஊழலை எதிர்க்கும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும்,
“நாட்டின் பிரச்சினைகளைச் சமாளிப்பது குறித்து எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை. கல்வி, சுகாதார துறைகள் குழப்பத்தில் உள்ளன,”என அவர் கடுமையாக விமர்சித்தார்.
“இந்தியாவைப் போன்ற பல நாடுகளில் முன்னாள் தலைவர்களுக்கு இதைவிட சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன,” எனவும்,
“நான் ஊழலில் ஈடுபடவில்லை. என் ஒரே வீடு ரோஸ்மீட் பிளேஸில் இருந்தது. அதை விற்று அதன் பணத்தில் தான் வாழ்கிறேன்,” எனவும் குறிப்பிட்டார்.
Editor _ kathir