சிங்கள இனவாத கட்சிகளை தமிழ் மக்கள் தெரிவுசெய்யக்கூடாது- பொன் சுதன்!
வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தயாராக இல்லை. மாற்றம் என்ற ஊடக மாயைக்குள் சிக்கிக்கொள்ளாது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து பற்றுறுதியுடன் இருப்பவர்களைத் தங்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யவேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார் தண்ணீர் குழாய் சின்னத்தில் இலக்கம் 6 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொன் சுதன். யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித் துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் முன்னைய அர சாங்கங்கள் போன்றே செயற்படப் போகின்றது.
இலங்கையில் எங்கும் இல்லாதவாறு வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமளவான இராணுவத்தினர் தமிழர் பகுதிகளிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ் மக்களை எப்போதும் இராணுவ அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் செயற்பாட்டையே கடந்த கால அரசாங்கங்கள் அனைத்தும் முன்னெடுத்தன.
மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்தி ருக்கும் அநுரகுமார திஸாநாயக்க வின் ஆட்சியில் இந்தநிலை மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடந்தகால அரசாங்கங்கள் போன்றே, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க விரும்புகின்றது.
தமிழ் மக்கள் மாற்றம் என்ற மாயை குள் சிக்கிக்கொள்ளாது தமிழ்த்தேசியம் சார்ந்து பற்றுறுதியுடன் பயணிப்போரைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பவேண்டும். தமிழ்த் தேசியத்தின் வழியில் விட்டுக்கொடுப்பின்றிப் பயணிப்பேன் என மாவீரர் துயிலும் இல்லங்களில் சத்தியம் செய்து நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறேன்.
போலித் தமிழ்த் தேசியவாதிகளை புறந்தள்ளி ‘தண்ணீர் குழாய் இலக்கம் 6 க்கு’ வாக்களித்து மக்கள் என்னை தெரிவுசெய்யவேண்டும் , மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்யலாம் என்பதை நிருபித்துக் காட்டுவேன் என்றார்.