இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல எமது அரசியல்வாதிகளே காரணம்- பொன் சுதன்!
யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதியில் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளனர். இது பாரதூரமான பிரச்சினை. எமது இனத்தின் இருப்பிற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என வேட்பாளர் பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் இந்த தவறான பழக்கத்திற்கு எமது அரசியல் வாதிகளே காரணம். வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்கள் இளைஞர்கள் வழி தவறிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது.இந்த நிலையை நீக்குவதற்கு கடந்த காலங்களில் எமது பிரதிநிதிகளாக இருந்த எவருமே நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறான அரசியல் வாதிகளை இனியும் தெரிவு செய்யப் போகின்றனரா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். தனி ஒருவனாக எவ்விதமான அரசியல் அதிகாரமற்ற நிலையில் நான் இந்த மண்ணில் செய்தவற்றில் ஒரு வீதம் கூட இந்த அரசியல் வாதிகள் செய்யவில்லை.
எமது இளைஞர் யுவதிகளுக்கு ஒரு உத்தரவாதம் வழங்குகிறேன். நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டால் யாழ் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு ஒரு வருடத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.
தனி ஒருவனாக பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த என்னால் அரசியல் அதிகாரம் கிடைத்தால் போதும் ஒரு வருடத்தில் தீர்வினைக் கொண்டுவர முடியும் என்றார்.
சில தினங்களுக்கு முன் பளை பகுதி இளைஞர் கழகங்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் பொன் சுதன் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அருணோதயம் மக்கள் முன்னணியின் சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் இலக்கம் 6 இல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.