வெலிகமாவில் “ஐஸ்” விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு – வெளிநாட்டு இளைஞர் கைது
வெலிகம – [29 செப்டம்பர் 2025]
இலங்கையில் “ஐஸ்” எனப்படும் மெதபெடமைனை விடவும் ஆபத்தான புதிய வகை போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெலிகம பகுதியில் அமைந்திருந்த விடுதியொன்றில் ரகசிய தகவலின் அடிப்படையில் வெலிகம பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையிலேயே இந்த பெரிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது.
சோதனையில், அங்கு செயல்பட்டிருந்த போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், அங்கு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட முக்கிய மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இறுதி அறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தங்காலைப் பகுதியில் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 3 லாரிகளில் இருந்த போதைப்பொருள் சரக்கு தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில், சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு மோட்டார் வாகனம் மாத்தறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
—
Editor: கதிர்