பெண்ணின் சடலம் மீட்பு! தாயார் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தாயாரை பராமரித்து வந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.
60 வயதான குறித்த பெண் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் வயது முதிர்ந்த தாயாரை பராமரிக்க வேண்டும் என நாட்டிற்கு வந்துள்ளார். தாயாரை பராமரிப்பதால் வெளியில் நடமாடுவது குறைவு எனவும் இரண்டு மூன்று நாட்களாக நடமாட்டத்தை அவதானிக்கவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் துர்நாற்றம் வீசியதை அடுத்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொலிஸார் குறித்த வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. பூட்டினை உடைத்து உள்நுழைந்த போது 60 வயதான மகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் வயதான தாயார் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள் உயிரிழந்து ஒரு சில நாட்கள் ஆகியிருக்கலாம். வயதான அவரது தாயார் உணவு, தண்ணீர் இன்றி சில நாட்கள் இருந்திருக்கிறார். அயலவர்கள் எனும் உறவுமுறை தற்போது சிதைவடைந்து போயுள்ளமைக்கு இச்சம்பவம் உதாரணம் என சமூக சேவகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.