வித்தியா கொலை வழக்கு: விடுவிக்குமாறு குற்றவாளிகள் மனு: நீதிபதி பதவி விலகல்!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவீஸ் குமார் உட்பட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி நியமித்த ஐந்து பேர் கொண் உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவரான நீதிபதி எஸ்.துரைராஜா விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.
இந்த மேன்முறையீடுகள் நீதிபதிகளான எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது நீதிபதி எஸ்.துரைராஜா, தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த வழக்கின் விவகாரங்களை மேற்பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்புகள் உரிய முறையில் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை சுமார் 06 வருடங்களாக தாமதமாகியுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதி எஸ்.துரைராஜா, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அதன்படி, மொழிபெயர்ப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உரிய மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் குமார் உள்ளிட்டவர்களுக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தமக்கு தண்டனை வழங்கிய விதம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து பிரதிவாதிகள் மேன்முறையீடு செய்துள்ளனர்.
இதன்படி, தண்டனைகளில் இருந்து தம்மை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு பிரதிவாதிகள் உச்ச நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.