அநுரகுமார திசாநாயக்க – மக்கள் மனதில் பதியும் புதிய தலைமுறை ஜனாதிபதி
இலங்கையின் ஜனாதிபதிகளில் சமகாலத்தில் அநுரகுமார திசாநாயக்க, அவரது தனித்துவமான செயற்பாடுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியைக் காட்டிலும், மக்கள் மனங்களை தொட்ட பணிவான நடவடிக்கைகளால் அவர் தனித்துவம் பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று (2025 ஆகஸ்ட் 4) கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சி, இந்தத் தத்துவத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியது.
இந்நிகழ்வு, மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய ரீதியில் கொண்டுசெல்லும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விருது வழங்கும் தருணத்தில் நிகழ்ந்த சிறிய ஒரு நிகழ்வு, அவரின் பணிவையும் மனிதநேயத் தன்மையையும் வெளிக்கொணர்ந்தது.
விருது பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவருடன் புகைப்படம் எடுக்கும்போது, அவரின் உயர்ந்த பதவியை ஒரு பக்கம்தள்ளி வைத்து, முட்டிக்காலில் அமர்ந்து புகைப்படம் எடுத்தார் ஜனாதிபதி.
இச்செயல், நிகழ்வில் பங்கேற்றோர்களிடையே அசாதாரணமான உருக்கத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.
“இது போன்ற செயற்பாடுகள் அரசதலைவர்களிடமிருந்து பார்ப்பது அரிது” என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுவாக, அதிகாரத்தின் உயரத்தில் இருப்பவர்கள், மக்களை நெருக்கமாக அணுக இயலாது என்பதொரு பாரம்பரியமான எண்ணம். ஆனால், அநுரகுமார திசாநாயக்க, தனது நடத்தை, அடக்கம் மற்றும் மனிதநேயத்தால் அந்த எண்ணத்தைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்.
இது அவரை மாற்று பார்வையுடன் பார்க்கும் அரச தலைவராக, இன்றைய சமூகம் முன்னிறுத்தும் விதமாகும்.
Editor கதிர்