வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம் விழாவில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக்கொடி போராட்டம்.
ஜனாதிபதி கலந்துகொள்ளும் வவுனியா பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தபோது சோதனைச்சாவடியில் வழிமறித்த பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களை நகர விடாது தடுத்தனர்.
பொலீஸாரின் தடையை உடைத்து ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செல்ல முற்பட்ட போது பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், போர்க் குற்றவாளியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து,சர்வதேச விசாரணையே தேவை என கோஷம் எழுப்பியதுடன் பொலீசாருடனும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் உறவுகள் காணாமல் போகவில்லை, காணாமல் ஆக்கப்பட்டார்கள், நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடும் சுதந்திரம் இல்லையா, எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினர்.
கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார், அவரை நம்பியே நமது பிள்ளைகளை ஒப்படைத்தோம், எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும் அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். பொலீஸார் அவர்களை முன் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் வருகை தந்து குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்தது ஜனாதிபதியைச் சந்திக்குமாறு கூறினார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் நாம் அவரைச் சந்திக்க வரவில்லை எங்கள் அனைவரையும் முன் செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன் குற்றவாளி எப்படி நீதிபதியாக மாற முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
இரண்டு மணித்தியாலங்களிற்கும் மேலாக குறித்த பகுதியில் நுழைய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அனுமதிக்காது வழிமறித்து நின்றனர். ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.