மயக்க மருந்து கொடுத்து வயோதிப பெண்ணின் நகை கொள்ளை! யுவதி கைது!
வவுனியா பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் வயோதிப பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்த பின்னர் இளைப்பாறிய போது அங்கு வந்த யுவதி ஒருவர் குறித்த வயோதிப பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடியுள்ளார்.
சுகவீனம் என்பதால் தனியாக வீட்டுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்து முச்சக்கர வண்டியில் வயோதிப பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதுடன் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தையும் பருகக் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் முதிய பெண் மயக்கமடைந்ததும் அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என ஏழரைப் பவுண் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மயக்கம் தெளிந்ததும் நகைகள் திருடப்பட்டது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த வயோதிப பெண் முறையிட்டுள்ளார்.இதனையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த யுவதியை கைது செய்துள்ளனர்.