4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின.
இதில், நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரசல் 64 ஓட்டங்களையும், சால்ட் 54 ஓட்டங்களையும் குவித்தனர்.
இதையடுத்து, 209 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதரபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால், அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அகர்வால் 32 ஓட்டங்களையும், அபிஷேக் 32 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த திரிபாதி 20 ஓட்டங்களுடனும், மார்க்ரம் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஆனால், அதிரடியாக ஆடிய கிளாசன் அரைசதம் விளாசினார். அப்துல் சமத் 15 ஓட்டங்களை எடுத்தார்.
63 ஓட்டங்களை குவித்த கிளாசன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற இறுதிப் பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை இறுதிவரை போராடிப் பெற்றது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிபெற்றது.