க.மகேசன் யாழ் மாவட்ட செயலராக இருக்கும் வரை யாழிற்கு விமோசனம் இல்லை!
அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியும் யாழ் மாவட்டச் செயலர்
க. மகேசன் பதவியில் இருக்கும் வரை இந்த மாவட்ட மக்களுக்கு அபிவிருத்திகளோ, தீர்வுகளோ கிட்டாது என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த. நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது சபை உறுப்பினர் ஒருவர் “தற்போது ஜனாதிபதி மக்களின் நலன்களை முன்னிறுத்தி கிராம அலுவலர் பிரிவுகளில் தலா மூன்று மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மற்றும் வட்டாரங்களுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளார்.
குறித்த திட்டத்தை பாரபட்சமின்றி முன்னெடுக்க வேண்டும். ஆனால் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஊடாக ஒரு பட்டியல் அனுப்பப்பட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் கௌரவம் கொடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர் நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தில் மட்டும் இவ்வாறான புறக்கணிப்பு நடைபெற்றுள்ளன. இதற்கு மாவட்ட செயலர் தான் பதில் கூற வேண்டும். ஆனால் அவர் ஓர் அரசியல் தரப்பினரின் பின்னணியிலிருந்து செயற்படுவதால் அந்த அரசியல் தரப்பினரது முடிவுகளை அதிகாரிகள் ஊடாக மக்களிடம் திணிக்கிறார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதி அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.