கொழும்பு – 22 செப்டம்பர் 2025
இலங்கையில் இணைய வழி பாலியல் துஷ்பிரயோகங்கள் 50% அதிகரிப்பு – பொலிஸ் எச்சரிக்கை
இலங்கையில் இணையத்தின் மூலம் சிறுவர்களை குறிவைத்து இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்மா அதிபர் (ASP) உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு 18 வயதிற்குக் குறைவான 15 சிறுவர்கள் இணையத்தின் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை 28 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 50% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2024ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பாக 282 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை 206 சிறுவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக, 2024ஆம் ஆண்டு 375 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அதனுடன் தொடர்புடைய 114 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு இதுவரை 118 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ASP வுட்லர் தெரிவித்தார்.
சிறுவர்களோ, பெண்களோ தொடர்பான எந்தவொரு பிரச்சினைகளும் இருந்தாலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, அல்லது கீழ்க்கண்ட அவசர எண்களுக்கோ உடனடியாக தகவல் அளிக்கலாம் என அவர் அறிவுறுத்தினார்:
119, 118 – அவசர அழைப்பு எண்கள்
109-1997 – சிறுவர் பாதுகாப்பு அவசர அழைப்பு எண்
071 859 8888 – புதிய பொலிஸ் மா அதிபரின் நேரடி எண் (புகைப்படம்/வீடியோவுடன் முறைப்பாடு செய்யலாம்)
Editor: கதிர்