நாட்டின் சில பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் நேற்று (20) மேற்கொண்ட சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்திய பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சீதுவ சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவுடன் சீதுவ பொலிஸார் சீதுவை மருந்தகங்களை சோதனையிட்டனர்.
இதன்போது பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல், மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த குற்றத்திற்காக 1600 மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 29, 32, 53 மற்றும் 65 வயதுடைய பண்டாரவளை, வெலிசர, திவுலப்பிட்டிய, நீர்கொழும்பு மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.