ஜனாதிபதி அனுர இன நல்லிணக்கத்தை விரும்பினால் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டும்- பொன் சுதன் வேண்டுகோள்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன மத பாகுபாடற்ற நாட்டினை உருவாக்குவேன் என தெரிவித்து வருகிறார். அவர் உண்மையில் இன நல்லிணக்கத்தை விரும்புபவராக இருந்தால் மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன், சுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத் திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அருணோதயம் மக்கள் முன்னணி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் “தண்ணீர் குழாய் சின்னத்தில் இலக்கம் 6 இல் முதன்மை வேட்பாளராக அவர் போட்டி யிடுகின்றார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: –
“இந்த கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளன. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலுமில்லம். ஒரு சிலரை பொறுத்த வரை இது சுடுகாடு.
எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் இலங்கை இராணுவம் குடியிருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரை இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால் எம்மை பொறுத்தவரை இவர்கள் எமது உறவுகள், அண்ணன் தங்கைகள்.
JVP அமைப்பின் தலைவர் ரோஹண விஜயவீரவையும் பயங்கரவாதி என்றே அரசு அழைத்தது. JVP உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி அரசால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வலி மிகுந்த சம்பவங்களை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அனுபவித்திருப்பார்.
ரோஹண விஜயவீரவையும் பயங்கரவாதிகள் என கொல்லப்பட்ட JVP உறுப்பினர்களையும் நினைவு கூறுவதற்கும் அஞ்சலிப்பதற்கும் எந்த தடையும் இல்லை. ஆனால் எங்கள் உறவுகளை அஞ்சலிக்க முடியாத நிலையில் எங்கள் உறவுகளை விதைத்த இடத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு இராணுவம் நிலைகொண்டுள்ளது.
எங்கள் உறவுகளை அஞ்சலிக்க கூட முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் எம்மை வைத்துள்ளது. இந்த இடத்தில் நின்று கொண்டு இலங்கை ஜனாதிபதி, பௌத்த குருமார்கள், சிங்கள் மக்களுக்கு இருகரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இதை துயிலும் இல்லமாக நினைக்கா விடினும் ஒரு சுடுகாடாக நினைத்தாவது இதை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதை விடுவிக்கும் பட்சத்தில் அமைதி. சமாதானம் இதில் இருந்தே ஆரம்பிக்கப்படும். இறந்தவர்களை அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போது ஒரளவேனும் மன நிறைவாக இந்த நாட்டில் அவர்கள் வாழ முடியும்.”எனத் தெரிவித்தார்.