யாழ்ப்பாணம் உரும்பிராய் வைத்தியர் மீது தாக்குதல் – கைது செய்யப்பட்ட இருவரை பொலிஸார் பிணையின்றி விடுதலை செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – 19 செப்டம்பர் 2025
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் ஒரு வைத்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பிணையின்றி விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு (17) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் வீதியில், தனியார் வைத்தியர் ஒருவர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மதுபோதையில் இருந்த சிலர் சாலையின் நடுவில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர் தமக்கு வழிவிடுமாறு கேட்டபோது, அந்த குழுவில் இருந்த சிலர் அவர்மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரை கைது செய்தனர். இருப்பினும், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் பிணை எதுவுமின்றி அவர்களை விடுவித்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.