நூற்றுக்கணக்கான ஏக்கர் ஆக்கிரமிப்பில்: ஐந்து கிலோமீட்டர் பாதையை விடுவித்து அரசியல் நாடகம்!
பல நூறு ஏக்கர் மக்கள் வாழ்விடம் முப்படைகளின் ஆக்கிரமிப்பில் இருக்கும் போது ஐந்து கிலோமீட்டர் பாதையை விடுவித்து தேர்தலுக்கான அரசியல் நாடகம் ஆடுகிறது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி. இந்த கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் முன்னாள் யாழ் மாநகர மேயர் இம்மானுவல் ஆனல்ட்.
யாழ் நகரில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் மக்களின் வளம் கொழிக்கும் பல நூறு ஏக்கர் நிலம் முப்படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த பகுதி மக்கள் இன்றும் முகாம்களில் வாடுகின்றனர். தமிழ் மக்களில் அக்கறை உள்ளவர்கள் போல் தேர்தலுக்காக நாடகம் ஆடாமல் மக்களின் வாழ்விடங்களை விடுவிக்க வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 5 கிலோமீட்டர் வரையிலான பாதையை விடுவித்துவிட்டு வீதியோரங்களில் முட்கம்பி வேலிகளை அமைத்து இராணுவ நிலைகளை பலப்படுத்துகின்றனர்.
தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி எனும் JVP யின் கபட நாடகத்தை புரிந்துகொள்ள வேண்டும். அன்று தொடக்கம் இன்றுவரை தமிழரசுக் கட்சி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதற்காக போராடி வருகிறது. பல பகுதிகளை விடுவித்துள்ளது.
தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். தமிழரசுக் கட்சியினை பலப்படுத்தி பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மாநகர மேயர் இம்மானுவல் ஆனல்ட் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.