வவுனியாவில் கனரக வாகனம் மோதிய விபத்தில் ஜெர்மன் பிரஜை உயிரிழப்பு
கனகராயன்குளம் – செப்டம்பர் 20, 2025
வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரச்சம்பவத்தில், ஜெர்மன் பிரஜை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19.09.2025) வவுனியா – கனகராயன்குளம் ஏ9 வீதியில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம், அதே திசையில் சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஜெர்மன் நாட்டு நபர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அந்த நபர் சமீபத்தில் ஜெர்மனியில் இருந்து வருகை தந்து, கனகராயன்குளம் பகுதியில் தங்கி வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக கனரக வாகனத்தின் சாரதி கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.