வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு ஒன்லைனில் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க அல்லது கடவுச்சீட்டை புதுப்பிக்க ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்குச் செல்லத் தேவையில்லாமல் ஒன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இ- கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தனித்தனியாக, ஒன்லைன் விசா விண்ணப்ப நடைமுறையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் விசாக்களை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான பொறிமுறையை உடனடியாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினருக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.