புலனாய்வு அதிகாரி சொனிக் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்தவர்தான்: ஒப்புக்கொண்டது இலங்கை அரசு!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்புக்குள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய இரகசிய நடவடிக்கைகள் இருந்ததை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
‘சொனிக் சொனிக்’ என அடையாளம் காணப்பட்ட நபர் உண்மையில் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புலனாய்வு அதிகாரியே. இந்த புலனாய்வு அதிகாரி திறமையாக பயங்கரவாத வலையமைப்பில் நுழைந்து அவர்களது செயற்பாடுகள் குறித்த தகவல்களை சூட்சமமாக கண்டறிந்திருந்தார்.
அவர் பயங்கரவாதிகளுடன் இருந்தார். பயங்கரவாதிகளிடம் அவ்வாறுதான் இருக்க முடியும். அங்கு ஒரு பொலிஸ் அதிகாரியாக அவரால் இருக்க முடியாது. பயங்கரவாத வலையமைப்புக்குள் பிரவேசித்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு மேலும் பல இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்திலும் சம்பவங்கள் நடக்கலாம். இதனை தடுப்பதற்கு புலனாய்வு பிரிவினர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருக்கலாம் இவர்களை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் அப்போதே தாக்குதல்களை தடுக்க முடியும், என்றார்.